horse

horse

Monday, August 31, 2015

ரத்த அழுத்தம்


01. ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான உணவு, பிராண வாயுவை எப்போதும் கிடைக்கச் செய்யவும்; திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றவும், ஓர் அமைப்பு நம் உடலுக்கு தேவை. அந்த அமைப்பு தான், ரத்த ஓட்டம். அந்த ரத்த ஓட்டம், ஒருவித அழுத்தத்தால் தான், உடல் முழுக்க செல்கிறது. அதைத் தான், ரத்த அழுத்தம் என்கின்றோம். 
02. உயர் ரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள்?எந்த காரணமும் இல்லாத நிலையில், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அதற்கு, ‘முதல் நிலை உயர் ரத்த அழுத்தம்’ என்று பெயர். இதில், மரபணு சார்ந்த ரத்த அழுத்தமும் அடங்கும். கர்ப்பத் தடை மாத்திரை உட்கொள்ளுதல், வேண்டாத தீய பழக்கங்கள், புகைப் பிடிப்பது, மது அருந்துவது, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வரும் உயர் ரத்த அழுத்தத்திற்கு, ‘இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம்’ என்று பெயர். 
03. மேற்சொன்ன காரணங்கள் மட்டுமே, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனவா?
நவீன காலத்தில், டின்னில் அடைத்து விற்கப்படும் உணவுகள், துரித உணவுகளை உண்பது, மிகவும் சாதாரணமாகி விட்டது. இதில், ருசிக்காக அதிகளவு கொழுப்பு பொருட்களும், உப்பும் சேர்க்கப்படுகிறது. இதனால், பெரும்பாலானோருக்கு, இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. 
04. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள்?
சிறுநீரகக் கோளாறுகள், ரத்தம் சிறுநீரகங்களுக்குக் குறைவாகச் செல்லுதல், பக்கவாதம், இதயம் தொடர்பான பல்வேறு நோய்கள், ஹார்மோன்களின் அளவு மாறுதல் போன்றவை ஏற்படுகின்றன. 
05. ரத்தத்தில் அதிகமாக உப்பு சேர்ந்தால், ரத்த அழுத்தம் மட்டுமின்றி, சிறுநீரக கோளாறும் ஏற்படுகிறதாமே?
உப்பை அதிகளவில் உட்கொள்வதால், அது ரத்தத்தில் கலக்கிறது. உப்பின் அடர்த்தி நிலையை குறைக்க, ரத்தம், உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக் கொண்டு, சிறுநீரகம் மூலம் அதை வெளியே தள்ள முயல்கிறது. இதனால், ரத்த அழுத்தம் அதிகமாகி, சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. 
06. ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி உதவுமா?
கண்டிப்பாக உதவும். அதிகாலை நடைபயிற்சி (45 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை), சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தல் நல்லது. யோகாசனம் செய்வது மிகவும் சிறந்தது. இது, மன அழுத்தத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால், 10 மி.மீ., அளவு உயர் ரத்த அழுத்தம் குறையும் என, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
07. எவ்வாறு நடைபயிற்சி செய்ய வேண்டும்?
மூச்சு இரைக்க நடைபயிற்சி மேற்கொள்ளக் கூடாது. நடையில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்; பாதம் முழுவதும், ஒரே சீராக அழுத்தப்பட வேண்டும். காலை நேரத்தில், வெயிலுக்கு முன் நடப்பது நல்லது. 
08. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க, உணவுக் கட்டுப்பாடு தேவையா?
எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை உட்கொள்ள வேண்டும்; வயிறு புடைக்க உண்பதை தவிர்ப்பது நல்லது. உண்ட உணவு செரிக்கும் முன்பே, அடுத்த வேளை உணவை எடுத்துக் கொள்வதும்; நீண்ட பட்டினி கிடப்பதும், உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும். எண்ணெயில் பொரித்த உணவுகள், புளிப்பு பண்டங்கள், மசாலா பொருட்கள், காபி, டீ, பருப்பு வகைகள், மாமிச உணவுகள், வாயுவை பெருக்கும் உணவுப் பொருட்களை குறைத்துக் கொள்ள வேண்டும். 
09. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் பராமரிக்க, என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?
கீரைகள், பழங்கள் போன்றவற்றை, உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, குப்பைமேனி கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிட வேண்டும். கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. காலை உணவை கண்டிப்பாக தவிர்க்கக் கூடாது.
10. உணவு மாற்றம் மட்டுமல்லாமல், பழக்க வழக்கங்களிலும் மாற்றம் தேவையா?
மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், எரிச்சல், தீரா சிந்தனை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதை, அறவே தவிர்க்க வேண்டும்; மது அருந்துதல் கூடாது. இப்படி, சிறு சிறு விஷயங்களில் நம்மை மாற்றிக் கொண்டால், ரத்த அழுத்தம் மட்டுமல்ல; நீரிழிவு நோயிலிருந்து கூட நம்மை காத்துக் கொள்ளலாம்.

5 comments: